பொலிஸாருக்கு புதிய பரிந்துரைகள்

ஆர்ப்பாட்டங்களின் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் பொலிஸாருக்கு புதிய பரிந்துரைகள்

by Staff Writer 24-04-2022 | 3:09 PM
Colombo (News 1st) மனித உரிமைகளை பாதுகாத்து போராட்டங்களில் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் பொலிஸாருக்கு புதிய பரிந்துரைகளை வழங்குவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பரிந்துரைகளை வழங்குவதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவரின் மேற்பார்வையில், மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ரம்புக்கனை போராட்டத்தின் போது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பொலிஸ்மா அதிபர் அண்மையில் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட போது, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கு இணங்க, போராட்டங்களின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலான முறையான பொறிமுறை அவசியம் என இதன்போது உறுதியானதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறினார். மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவதற்கு பொலிஸ்மா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார். இதனிடையே, ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான குற்றப​ைபுலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை நாளை(25) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பொலிஸ்மா அதிபருக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், ரம்புக்கனை ஆர்ப்பாட்ட நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் C.W.C.தர்மரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.W.கீர்த்திரத்ன ஆகியோரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று முன்தினம்(22) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.