காலி முகத்திடல் போராட்டத்திற்கு நாலாபுறமிருந்தும் ஆதரவு 

by Staff Writer 23-04-2022 | 8:18 PM
Colombo (News 1st) அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம், பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மை உள்ளிட்ட காரணங்களால் நாடு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உரிய காலத்தில் உரிய தீர்மானங்களை எடுக்காமையே இந்த பிரச்சினைக்கு காரணம் என தெரிவித்து மக்களின் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. எனவே, உரிய தரப்பினரை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு நாலாபுரமிருந்தும் மக்களின் ஆதரவு கிடைத்தவண்ணமுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தன்னெழுச்சி போராட்டத்தின் 15 ஆம் நாள் இன்றாகும். இன்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். விசேட தேவையுடையோரும் பேரணியாக ஆர்ப்பாட்டத் திடலுக்கு வருகை தந்தனர்.   கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளின் பழைய மாணவர்களும் வயம்ப மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களும் ஹொரணை ஶ்ரீபாலி கல்லூரியின் பழைய மாணவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தில் சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள மாத்தறை விமலதம்ம தேரர் இன்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தெரிபெஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மாத்தறை விமலதம்ம தேரர் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.​ே நேற்று (22) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  தெரிபெஹே சிறிதம்ம தேரர் இன்று மாலை போராட்டக்களத்திற்கு வருகை தந்து அதன் பின்னர் ஶ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரை வரை பேரணியொன்றையும் முன்னெடுத்தார்.