மிரிசுவிலில் ரயிலுடன் சிறிய ரக லொறி மோதி விபத்து: சிறுவன் பலி 

மிரிசுவிலில் ரயிலுடன் சிறிய ரக லொறி மோதி விபத்து: சிறுவன் பலி 

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2022 | 3:57 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் பகுதியில் ரயிலுடன் சிறிய ரக லொறி மோதி விபத்திற்குள்ளானதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மிருசுவில்லை சேர்ந்த ஒ​ரே குடும்பத்தின் மூவரே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

விபத்தில் 12 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த 42 வயதான தந்தையும் 15 வயதான மற்றைய மகனும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தவசிக்குளத்தில் இருந்து A9 பிரதான வீதிக்கு செல்வதற்காக புகையிரத கடவையைக் கடக்க முற்பட்ட சிறிய ரக லொறி, இன்று காலை 10:45 அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இதனிடையே, விபத்து இடம்பெற்ற பகுதியில் ரயில் மார்க்கத்தை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடிகாமம் பொலிஸார் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொலிஸார் எழுத்து மூலமான உறுதிப்பாட்டை மக்களிடம் கையளித்ததன் பின்னரே போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்