உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் நாட்டின் நட்சத்திர அதிகாரம் பொருந்தியவர் உள்ளாரா: கொழும்பு பேராயர் சந்தேகம் 

by Staff Writer 21-04-2022 | 9:44 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகளாகிவிட்டன. இதனை நினைவுகூர்ந்து, நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, "269 பேர் மௌனித்து விட்டனர் , 69 இலட்சம் பேர் எழுச்சி கண்டனர்" எனும் தொனிப்பொருளில் இன்று பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை இடம்பெறாமை உள்ளிட்ட செயற்பாடுகளின் பின்புலத்தில், நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் பெற்றுக்கொண்ட நட்சத்திர அதிகாரம் பொருந்தியவரா இருக்கின்றார் என்ற சந்தேகம் எழுவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது பேராயர் இதனை தெரிவித்தார். கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நேரமான காலை 8.45-இற்கு பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆராதனை இடம்பெற்றது. சர்வ மதத் தலைவர்கள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் சிலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியாது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று மீண்டும் சுட்டிக்காட்டினார். இந்தத் தாக்குதலின் பின்புலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அப்பால் சென்ற பாரிய சதித்திட்டம் ஒன்று இருப்பதாகவும் பேராயர் குறிப்பிட்டார்.   ஒருதலைப்பட்சமாக ஒரு சில விடயங்களை மறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியை நிராகரிப்பதாகவும் கர்தினால் ஆண்டகை வலியுறுத்தினார். இதனிடையே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் விதமாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. சியோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இந்த விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.