ரம்புக்கனையில் உயிரிழந்தவருக்கு நீதி கோரி தெரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதம் 

by Staff Writer 20-04-2022 | 8:45 PM
Colombo (News 1st) ரத்துபஸ்வெலயில் நீருக்கான போராட்டத்தை வழிநடத்திய தெரிபெஹே சிறிதம்ம தேரர் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞருக்கு நீதி கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஸவும் உடனடியாக வௌியேற வேண்டும் எனவும் அவர்கள் வௌியேறும் வரையில், போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிபெஹே சிறிதம்ம தேரர் குறிப்பிட்டார். இதனிடையே, நேற்று (19) சத்தியாகிரகத்தை ஆரம்பித்த கட்டழகர் பிரசன்ன பீரிஸ் இன்று காலை அதனை நிறைவு செய்தார். அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான சத்தியாகிரகத்தை ராஜாங்கனை சத்தாரத்ன ​தேரர் ஆரம்பித்துள்ளார். நாடு முழுவதிலும் இருந்து மக்களின் பேராதரவு போராட்டத்திற்கு தொடர்ந்தும் கிடைத்த வண்ணமுள்ளது.