by Staff Writer 19-04-2022 | 8:43 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட ஜனநாயக மாற்றங்களைக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக 11 ஆவது நாளாகவும் இன்று தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இன்று காலை மழை பெய்த போதிலும் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படவில்லை.
கட்சி, இன, மத பேதமற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படுகிறது.
சர்வதேச அரங்கில் பதக்கம் வென்ற கட்டழகர் பிரசன்ன பீரிஸ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார்.
2013 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வௌ்ளிப்பதக்கம் வென்ற சச்சித் மதுரங்க 24 மணித்தியாலங்களாக இன்று முன்னெடுத்த சத்தியாகிரகத்தை நிறைவு செய்தனர்.
இதனிடையே, கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேரணியொன்றை முன்னெடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தினரும் போராட்டக்களத்திற்கு வருகை தந்தனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்திலும் இதற்கு ஆதரவு தெரிவித்து பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதனிடையே, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் இந்த சாத்வீக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.