நிலந்த ஜயவர்தனவே பொறுப்புக்கூற வேண்டும்: மொஹான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிலந்த ஜயவர்தன பொறுப்புக்கூற வேண்டும்: மொஹான் வீரகோன் 

by Staff Writer 19-04-2022 | 6:07 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னரே கிடைத்த தகவலுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, அந்த காலப்பகுதியில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாகவும் தற்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் செயற்படும் நிலந்த ஜயவர்தன பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி U.R. டி சில்வாவும் இணைந்துகொண்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து தௌிவூட்டுவதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, விசாரணை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் விடயங்களை தௌிவுபடுத்தினார்.
ஏப்ரல் 04 ஆம் திகதி இந்தியாவிடலிருந்து புலனாய்வு அதிகாரிகளால் கிடைத்த தகவல், வெறுமனே தகவல் மாத்திரம் என நிலந்த ஜயவர்தன சாட்சி வழங்கியுள்ளார். அது புலனாய்வுத் தகவல் அல்ல என அவர் சாட்சி வழங்கியுள்ளார். எனினும், அந்த தகவல் தொடர்பில் அரச புலனாய்வு பணிப்பாளர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு ஏப்ரல் 07 ஆம் திகதி கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். குறித்த அறிக்கை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்குமாறு சிசிர மெண்டிஸ் ஏப்ரல் 09 ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார். அந்த கடிதத்திற்கு அமைய, அப்போதைய பொலிஸ் மா அதிபர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், சாட்சியம் வழங்கிய நிலந்த ஜயவர்தனவிடம் குறுக்கு கேள்விகளை கேட்ட போது, இந்த விடயம் ஏப்ரல் 20 ஆம் திகதி மாலை 4.2-க்கே புலனாய்வு தகவலாக உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். எவ்வாறு அப்போது புலனாய்வு தகவலாக அது உறுதி செய்யப்பட்டது என நான் வினவினேன். ஏப்ரல் 04 ஆம் திகதி புலனாய்வுத் தகவல் அனுப்பிய அதே நபர் 20 ஆம் திகதியும் WhatsApp ஊடாக மீண்டும் தகவல் அனுப்பியதாக அவர் கூறினார். ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிடைத்த தகவலை உறுதி செய்ய புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்களா என கேட்ட போது, அதற்கு இல்லை என அவர் பதில் வழங்கினார். ஏப்ரல் 09 ஆம் திகதி நடைபெற்ற புலனாய்வு மீளாய்வுக் கூட்டத்தில் ஏன் இந்த விடயத்தை முன்வைக்கவில்லை என குறுக்கிட்டு கேட்ட போது, சிசிர மெண்டிஸிடம் கூறுமாறு தான் கேட்டதாக சாட்சியம் வழங்கப்பட்டது. எனினும், அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியூடாகவே, புலனாய்வு பிரிவின் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அவர் அதனை உரியவாறு செய்யவில்லை.
என மொஹான் வீரகோன் தெரிவித்தார். ஏதேனும் ஒரு வகையில் இந்த விடயத்தை கூறியதன் பின்னர், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, அமைதியின்மை ஏற்பட்ட பின்னர் தாக்குதல் நடந்திருக்காவிடின், தான் பணியிலிருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என அவர் சாட்சியம் வழங்கியபோது கூறியதாகவும் மொஹான் வீரகோன் குறிப்பிட்டார். ஒரு அதிகாரியின் தவறான தீர்மானத்தால் நாட்டில் 250 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர்,  அன்று நிலந்த ஜயவர்தனவிற்கு கிடைத்த தகவலை புலனாய்வுத் தகவலாக கருதாததாலேயே இந்த பேரழிவு ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.