by Staff Writer 18-04-2022 | 3:16 PM
Colombo (News 1st) சீனிக்கான வரியை குறைத்தமையினூடாக அரசு இழந்த வருமானத்தை உரிய தரப்பினரிடமிருந்து மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என அரச கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றினூடாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய, சுயமாக தலையீடு செய்வதற்குள்ள ஏற்பாடுகளின் அடிப்படையில் கணக்காய்வாளர் நாயகத்தினால் சீனி வரி சிக்கல் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கவனத்தை செலுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரசாங்கத்தின் அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமையால் இலங்கை பிரஜைகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மீறப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால் கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சீனிக்கான வரியைக் குறைத்ததன் மூலம் அரசு இழந்த வருமானத்தை உரிய தரப்பிடமிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதம் வரை குறைப்பதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் நுகர்வோருக்கு கிடைத்துள்ளதா என்பது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்விற்கமைய இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் விசேட வர்த்தக வரியை 25 சதமாக குறைப்பதற்கு 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இதன்பின்னர் சீனிக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டதுடன் 2021 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் 08ஆம் திகதி வரையிலான 4 மாதங்களில் அரசுக்கு 16,763 மில்லியன் ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக குறித்த கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
இந்த குறுகிய காலப்பகுதியில் மாத்திரம் சதொச நிறுவனம் இடைக்கிடையே தனியார் பிரிவு இறக்குமதியாளர்களிடம் அதிக விலைக்கு சீனியை கொள்வனவு செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்தமையூடாக சுமார் 102 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2021 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் பிரமிட் வில்மா நிறுவனத்தின் சீனி இறக்குமதி 1,222 வீதத்தால் அதிகரித்ததாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.