by Bella Dalima 15-04-2022 | 5:04 PM
Colombo (News 1st) தமிழகத்தில் நேற்று (14) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் வகையிலும் இன்று முதல் ஜுன் மாதம் 14 ஆம் திகதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நாட்களில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாதென தமிழக மீன் வளத்துறை அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த 15,000 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு நங்கூரமிடப்பட்டுள்ளன.
இந்த வருடத்திற்கான தடைக்கால நிவாரணத் தொகை 5000 இந்திய ரூபாவிலிருந்து 6000 இந்திய ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீன்பிடித் தடைக்காலத்தில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.