by Bella Dalima 15-04-2022 | 7:08 PM
Colombo (News 1st) உலக மக்களின் பாவங்களைச் சுமந்து தன்னுயிரை தியாகம் செய்த தேவகுமாரன் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூரும் பெரிய வௌ்ளி (புனித வௌ்ளி) இன்றாகும்.
அதுவரை அவமானத்தின் சின்னமாகக் கருதப்பட்ட சிலுவை , தேவகுமாரனின் சிலுவை தியாகத்தின் பின்னர் உலக மீட்பின் அடையாளமாக புனிதத்துவம் பெற்றது.
உலக மக்களின் பாவங்களுக்காக, அவர்களின் மீட்பிற்காக தன்னுயிரை சிலுவையில் தியாகப் பலியாக ஒப்புக்கொடுத்த நாளே பெரிய வௌ்ளியாகும்.
எமது மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டு எமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது (எசாயா 53 ஆம் அதிகாரம் 5 ஆம் வசனம்)
மரணத்தின் அர்த்தத்தை மாற்றியமைத்த கல்வாரித் தியாகம் ஆண்டவருடைய திருப்பாடுகளின் வௌ்ளியாக மாற்றம் பெற்றது.
உலகவாழ் அனைத்து மக்களும் மனித நேயத்துடனும் அன்போடும் வாழ வேண்டும் என்பதற்காக இயேசு கிறிஸ்து தனது உயிரைத் தியாகம் செய்தார்.
''பிதாவே இவர்களுக்கு மன்னியும் , தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கின்றார்கள் " (லூக்கா 23 ; 34)
இவ்வாறு தன்னை அவமானப்படுத்தியவர்களையும் துன்புறுத்தியவர்களையும் கொலை செய்தவர்களையும் மன்னித்ததன் மூலம் அன்பின் மகத்துவத்தை அவர் எடுத்தியம்பினார்.
ஆண்டவராம் இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவங்களைப் போக்க சுமார் 136 கிலோகிராம் எடையுடைய சிலுவையை கல்வாரி மலையில் சுமந்து சென்றார்.
அதிகாலை 3 மணியளவில் கெத்சமனே தோட்டத்தில் கைது செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து காலை 9 மணிக்கு கொல்கத்தா மலையில் சிலுவையில் அறையப்படும் வரை முள்முடி சூட்டப்பட்டு , கசையடிக்கு உள்ளாக்கப்பட்டு , அவமானப்படுத்தப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.
“ஏறக்குறைய நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை."
(லூக்கா 23:44-48)
இயேசு மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஆவியை விட்டார். அப்பொழுது தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. பூமியும் அதிர்ந்தது. கன்மலைகளும் பிளந்தன. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரித்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தன. நூற்றுக்கு அதிபதியும் அவனோட கூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும் பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு மிகவும் பயந்து மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். (மத்தேயு 27 ஆம் அதிகாரம் 50 தொடக்கம் 54 வரை)
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
இவ்வாறு பழைய ஏற்பாட்டில் எசாயா 53 ஆம் அதிகாரத்தில் 12 ஆவது வசனத்தில் சொல்லப்பட்ட வசனம் நிறைவேறியது.