இராஜினாமா கடிதத்தை கையளித்தார் லிட்ரோ தலைவர் 

ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்தார் லிட்ரோ தலைவர் 

by Bella Dalima 15-04-2022 | 5:51 PM

Colombo (News 1st) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

ஏப்ரல் 14, 2022 என திகதியிடப்பட்ட குறித்த கடிதத்தில், முறைகேடுகள் மற்றும் ஊழலால் பாதிக்கப்பட்ட, நிதி தணிக்கைகள் அற்ற அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் தலைவர் பதவியையே தாம் 2021 ஜூலை 26 ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல உண்மைகள், எரிவாயு நெருக்கடி, தற்போதைய நிலைமை மற்றும் தனது தனிப்பட்ட கொள்கைகளை மேற்கோள் காட்டி, 2022 ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் பதவி விலக தீர்மானித்ததாக தெஷார ஜயசிங்க கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எரிவாயு மாஃபியாவை வௌிக்கொணர்ந்ததன் பின்னர், நிர்வாகம் மற்றும் சமூக ரீதியில் லிட்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு இடைக்கிடையே இடையூறுகள் வந்ததாகவும், எரிவாயு தொடர்பில் இடம்பெற்ற அனைத்து நெருக்கடிகளும் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு பொறுப்பாகவிருந்த, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அல்லது நிதித்துறையில் உள்ள அரச அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு தமக்கு கிடைக்கவில்லையெனவும் தெஷார ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இந்த நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு உதவுவதை விடுத்து, பொய் பிரசாரங்களை மேற்கொண்டு நெருக்கடியை மேலும் அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான குறுகிய நோக்கம் கொண்ட அரசியல் நிலைமை, லிட்ரோ நிறுவனத்திற்கு மாத்திரமின்றி ஏனைய அரச நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை நிவர்த்திப்பதற்கு இன்னும் காலதாமதம் ஏற்படவில்லையென தெஷார ஜயசிங்க கூறியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் கடனுதவியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினூடாக முன்னெடுத்துள்ளதாகவும், அதனை தொடர்ந்தும் முன்னெடுப்பதன் மூலம் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதில் இருந்து குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை கட்டுப்படுத்தி நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஒத்துழைக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.