by Bella Dalima 15-04-2022 | 3:58 PM
Colombo (News 1st) விசேட அனுமதியின்றி கொள்கலன்களில் எரிபொருள் வழங்கப்படமாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) தெரிவித்துள்ளது.
எரிபொருளை பதுக்கி வைக்கும் செயற்பாட்டை தடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
எனினும், குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காலி - பின்னதுவ பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
காலி பின்னதுவ அதிவேக வீதியின் நுழைவாயிலை அண்மித்துள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வருகை தந்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்கலன்களில் எரிபொருள் வழங்க முடியாது எனும் தீர்மானத்தினால் தாம் மேலும் சிரமங்களை எதிர்கொள்வதாக குறித்த பிரிவினர் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தினால் காலி - பின்னதுவ அதிவேக வீதியுடனான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.