இன்று (15) முதல் விசேட பஸ் சேவைகள் முன்னெடுப்பு 

இன்று (15) முதல் விசேட பஸ் சேவைகள் முன்னெடுப்பு 

by Bella Dalima 15-04-2022 | 4:39 PM
Colombo (News 1st) சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் கொழும்பிற்கு திரும்புவோருக்காக இன்று முதல் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்காக மேலதிகமாக 200 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வர்ணவங்ச தெரிவித்தார். எதிர்வரும் 18 ஆம் ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இன்று முதல் வழமையான பஸ் போக்குவரத்தை முழுமையாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது டீசல் பற்றாக்குறை இல்லையெனவும் எதிர்வரும் நாட்களுக்கு தேவையான டீசலை முற்பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை,  இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட, தூர இடங்களுக்கான பண்டிகைக்கால விசேட போக்குவரத்து சேவை கடந்த 08 ஆம் திகதி முதல் நேற்று வரை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், வௌி மாகாணங்களில் இருந்து மீண்டும் கொழும்பிற்கு திரும்புவோருக்காக இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன், மேலதிகமாக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, ஏதேனும் சிக்கல்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் 1955 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொதுமக்கள் அறிவிக்க முடியுமெனவும் கூறியுள்ளது. இதேவேளை, கொழும்பிற்கு திரும்புவோருக்காக நாளை மறுதினம் (17) முதல் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.