கச்சத்தீவை மீட்பது தமிழக அரசின் முதன்மை குறிக்கோள்

கச்சத்தீவை மீட்டெடுப்பது தமிழக அரசின் முதன்மை குறிக்கோள்: கொள்கை விளக்க குறிப்புகள் சட்டசபையில் தாக்கல்

by Staff Writer 14-04-2022 | 5:20 PM
Colombo (News 1st) கச்சத்தீவை மீட்டெடுப்பது தமிழக அரசின் முதன்மை குறிக்கோளாக உள்ளதாக தமிழக அரசின் மீன் வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீன் வளத்துறை கொள்கை விளக்க குறிப்புகளை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழ் நாட்டு மீனவர்கள் தமது பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் போது, சர்வதேச கடல் எல்லையைக் கடப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதாக மீன் வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்படுவதும் அவர்களின் படகுகள் கைப்பற்றப்படுவதும்  கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையில் உள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட 88 படகுகளையும் 23 மீனவர்களையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்கு மீட்டெடுப்பது மற்றும் பாக்கு நீரிணை பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீனவ உரிமையை மீட்டெடுப்பது ஆகியன தமிழக அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது எனவும் கொள்கை விளக்கக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலம் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையைத் திரும்ப பெற முடியுமென தமிழக அரசு தொடர்ந்தும் வலியுறுத்துவதாக கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.