ஜனாதிபதி செயலகம் முன்பாக அணி திரண்டுள்ள பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு 

by Staff Writer 12-04-2022 | 8:47 PM
Colombo (News 1st) ஒரே நோக்கத்திற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பொதுமக்கள் ஒரணியாக கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அணி திரண்டு உள்ளனர். இவர்கள் தொடர்ச்சியாக 72 மணித்தியாலங்களைக் கடந்தும் சளைக்காமல் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நேற்றிரவு பெய்த கடும் மழை இந்த போராட்டத்திற்கு சவாலை ஏற்படுத்தியது. இடி முழக்கத்திற்கு நிகராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் குரலும் ஓங்கி ஒலித்தது. இடி முழக்கம் தணிந்த பின்னர் போராட்டக்களத்தில் இசை முழக்கம் களைகட்டியது. . போராட்டக்களத்திற்கு பாடல்கள் தேவையா? ஆத்திரத்திலிருந்து விடுபட்டு இலக்கை நோக்கிச் செல்லும் இந்த போராட்டக் களத்தில் அன்பை விதைப்பதற்காக பாடல்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்கியதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர், யுவதிகள் கூறினர். களத்தில் நின்று போராட்டத்திற்கு உயிரூட்டிய இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த செய்தியும் பதிவானது. இதனிடையே,  காலி முகத்திடலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக ''கோட்டாகோகம - Gottagogama'' என பெயரிடப்பட்டுள்ள போராட்டக்களத்தில் நூலகம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. போராட்டக்களத்தில் குடிநீர், உணவு , மருந்து வகைகள் பற்றாக்குறையின்றி தொடர்ச்சியாக கிடைத்தவண்ணமுள்ளதாக இளைஞர்கள் கூறினர். இரண்டு நாட்களுக்கு முன்னதாக குறித்த இடத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் நகர்த்திச் செல்லக்கூடிய கழிவறைகள் பொருத்தப்பட்டிருந்தன. இன்று அவற்றை வேறிடத்திற்கு மாற்றி அமைக்க சிலர் நடவடிக்கை எடுத்திருந்தனர். தன்னார்வமாக முன்வந்து மக்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு இன்று முற்பகல் இலங்கையின் பிரபல பாடகி நந்தா மாலினி, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, பிரபல நடிகை சுவர்ணா மல்லவாரச்சி உள்ளிட்ட சிரேஷ்ட கலைஞர்கள் சென்றிருந்தனர். இன்று பகல் வேளையில் இந்த போராட்டத்துடன் மேலும் பல இளைஞர்கள் இணைந்துகொண்டனர். மகா சங்கத்தினர், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டக்களத்திற்கு வருகைதந்து ​தொடர்ச்சியாக தமது ஆதரவை நல்கி வருகின்றனர். அரசாங்கத்தை வௌியேறுமாறு கோரி கொழும்பு - காலி முகத்திடலில் தன்னார்வமாக பலர் கூடி தமது எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். திருமணம் முடிந்த கையுடன் போராட்டக்களத்திற்கு நேற்று (11) வருகை தந்திருந்த கொழும்பை சேர்ந்த புதுமணத் தம்பதிகள் அங்கிருந்த பலரதும் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.