தமிழகத்தில் தஞ்சமடைந்த மேலும் 19 இலங்கையர்கள்

தமிழகத்தில் தஞ்சமடைந்த மேலும் 19 இலங்கையர்கள்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2022 | 7:25 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மேலும் 19 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மன்னாரிலிருந்து படகுகள் மூலம் 19 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியை இன்று(10) அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

மன்னாரிலிருந்து சென்ற 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரில் இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குகின்றன.

இவர்கள் இன்று(10) அதிகாலை சுமார் 2 மணியளவில் தனுஷ்கோடி – அரிச்சல்முனை முதலாம் மணல்திட்டில் வந்திறங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு சென்ற இராமேஸ்வரம் பொலிஸார் அவர்களை மண்டபம் கடலோரக் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் படகு மூலம் 6 பேர் அரிச்சல்முனைக்கு சென்றிருந்தனர்.

கடந்த 23 ஆம் திகதி ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் உள்ளிட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திலிருந்து தலைமன்னாருக்குச் சென்று அங்கிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற நால்வர், இந்திய கடலோரக் காவல் படையினரால் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே படகு மூலம் சென்ற 20 பேர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(10) அதிகாலை மேலும் 19 பேர் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்