பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் கொரோனாவா, பிழையான முகாமைத்துவமா?

by Bella Dalima 09-04-2022 | 9:17 PM
Colombo (News 1st) இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. COVID தொற்று காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர். அவ்வாறென்றால், தெற்காசியாவில் ஏனைய அனைத்து நாடுகளும் முன்னிலை பெற்றது எவ்வாறு? COVID தொற்று காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்ட இந்தியாவில் இவ்வருட பொருளாதார வளர்ச்சி வீதம் 7.5 ஆக காணப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் பாகிஸ்தான் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சி வீதம் நான்காக காணப்படுகின்றது. பங்களாதேஷ் 6.9 வீதமும் பூட்டான் 4.5 சதவீதமும் நேபாளம் 3.9 வீதமும் சுற்றுலாத்துறையினால் நாட்டை முன்னெடுத்து செல்கின்ற மாலைத்தீவு 11 வீதமும் வளர்ச்சியை இவ்வருடத்தில் எதிர்பார்க்கும் நிலையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2 .4 வீதமாக காணப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது. இதற்கான காரணம் கொரோனாவா அல்லது பிழையான பொருளாதார முகாமைத்துவமா? கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் நாட்டை முடக்குவது அல்லது திறப்பது தொடர்பில் சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டதா? உரிய நேரத்தில் தடுப்பூசி கொண்டுவரப்பட்டதா? தம்மிக்கவின் பாணிக்கும் முட்டிகளை ஆற்றில் போடுவது போன்ற மூட நம்பிக்கைக்கும் எவ்வளவு காலத்தை விரயம் செய்தார்கள்? அது மாத்திரமன்றி அந்நிய செலாவணியை நாட்டிற்கு கொண்டு வந்து ஏற்றுமதியை ஊக்குவிக்க கூடிய வேலைத்திட்டங்கள் இருந்தனவா? சுற்றுலாத்துறையை நெருக்கமான ஒரு சிலரின் கைகளுக்கு வழங்கியதைத் தவிர அதனை கட்டியெழுப்புவதற்கு ஏதேனும் திட்டங்கள் காணப்பட்டனவா? இறக்குமதிக்கு வரையறைகளை விதித்து, டொலரை நாட்டில் தக்கவைத்துக்கொள்வதற்கு நினைத்தாலும், இறுதியில் சீனி, தேங்காய் எண்ணெய், வெள்ளைப்பூண்டு போன்றவற்றிலும் மோசடிகள் இடம்பெற்றன. அதிலும் ஒரு சிலர் மாத்திரமே நன்மை அடைந்தனர். வாகன இறக்குமதிக்கு தடை விதித்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவைப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை ஞாபகம் இருக்கின்றதா​? இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் கடந்த வருடத்தில், ஒரே இரவில் இரசாயன உரம் இறக்குமதிக்கு தடை விதித்தார்கள். சேதனப் பசளையை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதாகக் கூறி விவசாயிகளை வீதிக்கு கொண்டு வந்தார்கள். அது மாத்திரமன்றி அதிக விலை கொடுத்து இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்தார்கள். ஒரு பிடி உரம் கூட பெற்றுக்கொள்ளாமல் 6.9 மில்லியன் டொலர்களை சீனாவிற்கு வெறுமனே செலுத்தினார்கள். நாட்டின் தேசிய சொத்துகளில் ஒன்றாகக் கருதப்பட்ட அரச வங்கி ஒன்றையும் இக்கட்டான நிலைக்கு தள்ளினார்கள். இவை வெறுமனே நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் அல்ல. இவற்றுக்கு பின்னால் இவற்றை பங்கு பிரிப்பதற்காக நண்பர்கள் சிலரும் இருந்தனர். ஆட்சிக்கு வந்த உடனேயே, அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கின்ற பிரதான மார்க்கங்களில் ஒன்றான வரியை கட்டுப்படுத்தி 600 பில்லியனை இழந்தனர். பின்னர் நாட்டில் செலவழிப்பதற்கு பணம் இல்லாததால், பணத்தை அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டது. பணம் அச்சிடுவதை மத்திய வங்கியில் இருந்த உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் போன்றோர் ஏற்கவில்லை. இதன் காரணமாக நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பதோடு, சேவை வழங்கும் செலவுகளும் அதிகரிக்கும். அதாவது பணவீக்கம் அதிகரிக்கும் என்பதையே அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். பின்னர் 2021 செப்டம்பர் 15 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தனர். பணம் அச்சிடுவதால் பணவீக்கம் அதிகரிக்காது, எமக்கு தேவையான அளவு டொலர் கிடைக்கும் மார்க்கங்கள் இருக்கின்றன. எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது என்று அவர் தெரிவித்திருந்தார். ஒரு சில அமைச்சர்களும் தேவையான அளவு பணம் இருப்பதாக மிகவும் உற்சாகமாக கூறினார்கள். நெடுஞ்சாலைகள் அமைப்போம் பாலங்கள் அமைப்போம் என்றும் கூறியிருந்தார்கள். நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், மக்களது தேவைகளுக்கு செவிசாய்க்காது, இவ்வாறான பல செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்தனர். இறுதியில் ஒரு வருட காலமாக 202 என்ற எல்லையில் இருந்த டொலரின் பெறுமதி அதிகரித்து, அந்நிய செலாவணியையும் தக்கவைக்க முடியாது போனது. டொலரின் கேள்விக்கும் விற்பனைக்கும் இடம் வழங்குங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்று பொருளாதாரத்தை கட்டி எழுப்புங்கள், கடனை மீளச் செலுத்த முடியாததால் கலந்துரையாடி அவற்றுக்கு கால அவகாசங்களை பெற்றுக்கொள்ளுங்கள், அல்லது இவற்றுக்கு மாற்றாக ஏதேனும் வியூகங்களை அமைத்துக்கொள்ளுங்கள் என பல நிபுணர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்திருந்தனர் . உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்ட எந்த ஒரு நபரும் இதனை பொருட்படுத்திக்கொள்ளவில்லை. இறுதியில், வெளிநாட்டு கையிருப்பு 1.5  பில்லியன் டொலர்களாக குறைவடைந்ததன் பின்னரே இவர்கள் அவதியுற்றனர். சீனாவிடம் மண்டியிட்டு 1.5  பில்லியன்களை பெற்று, தங்களுடைய கையிருப்பை உயர்த்திக் கொண்டாலும், தற்போது அதில் செலவழிப்பதற்கு டொலர்களாக மிஞ்சி இருக்கும் தொகை 1 பில்லியனை விட குறைவானதாகும். கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அனைவரும் கூறுகின்ற பின்புலத்தில், கடந்த ஜனவரி மாதம் 500 டொலர் மில்லியன்களை இறையாண்மை முறியாக மீள செலுத்தினார்கள். கழுத்து வரை பிரச்சினை நெருங்கியபோது, கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் டொலர் கைவிட்டுவிட்டது. கறுப்பு சந்தைகளில் டொலரின் பெறுமதி அதிகம் என்பதால், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட இலங்கை வங்கிகள் ஊடாக டொலர்களை அனுப்பி வைக்கவில்லை. தற்போது என்ன நேர்ந்துள்ளது, ஒரு டொலரின் பெறுமதி 320 ரூபாவையும் விட அதிகரித்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் டொலரை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தாலும், தற்போதும் கறுப்பு சந்தையில் டொலர் ஒன்றின் பெறுமதி சுமார் 400 ரூபாவாகக் காணப்படுகின்றது. 60 வீதத்தினால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி பொருட்களின் விலையிலேயே தாக்கம் செலுத்தியுள்ளது. டொலர் இன்மை காரணமாக எண்ணெய், பால் மா, எரிவாயு போன்றவற்றை விநியோகிக்க எவரும் விரும்பவில்லை. இறுதியில் துறைமுகத்திற்கு கப்பல் வரும் வரை காத்திருந்து, பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் பல மாதங்களாக வரிசைகளில் காத்திருக்கின்றனர். இந்த நிலைமைக்கு காரணம் கொரோனாவா அல்லது சீரற்ற முகாமைத்துவமா? மொத்தமாகவே நாடு வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் தற்பொழுது சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளார். நாட்டில் சீரான அமைச்சரவை ஒன்று இல்லை. மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையும் இல்லை. எதிர்காலத் திட்டம் ஒன்று இருப்பதாக தென்படவில்லை. இவ்வாறான பின்புலத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று டொலர்களை பெற்று நாட்டை கட்டியெழுப்ப முடியுமா? இந்த வருடத்திற்குள் 6.9 பில்லியன் கடன் செலுத்த வேண்டியுள்ளது. எரிபொருள் கொண்டுவருவதற்காக மாத்திரம் ஒரு மாதத்திற்கு 300 மில்லியனை விட அதிகம் தேவைப்படுகின்றது. மருந்து, உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதாக இருந்தால், அவற்றுக்கு டொலர் தேவை. சர்வதேச நாணய நிதியம் என்பது நத்தார் தாத்தாவை போன்று பரிசு வழங்கும் இடம் அல்ல. அவர்கள் பாரிய மாற்றங்களை எதிர்பார்ப்பார்கள். இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டார்கள். மேலும் ஒன்றரை பில்லியன் கோரியிருக்கின்றார்கள். பங்களாதேஷிடமிருந்தும் 250 மில்லியன்களை பெற்றுக்கொண்டார்கள். அந்த கடனை செலுத்துவதை கால தாமதம் செய்து விட்டு, தற்பொழுது மேலும் 250 மில்லியன்களை கோரியுள்ளார்கள். பாகிஸ்தானிடமருந்து 200 மில்லியன் கோரினார்கள். சீனா மேலும் இரண்டரை பில்லியன் தருவதாகக் கூறி இருக்கின்றது. இந்த நாடுகள் எதிர்பார்ப்பின்றி கடன்களை வழங்காது. அதற்கு நிபந்தனைகள் இருக்கின்றன. சீனாவிற்கு என்றால் தற்போதைக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என்பன வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய மூன்று தீவுகள், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள், சம்பூரில் பாரிய நிலப்பரப்பு, சமுத்திர மீட்பு மத்திய நிலையம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. இவை COVID தொற்றினால் ஏற்பட்ட விளைவுகளா? முற்றிலும் சீர்குலைந்து போன ஒரு முகாமைத்துவத்தின் கீழ் நாம் வாழ்ந்து வருவதன் பிரதிபலன்கள் அல்லவா இவை?

தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் !