தமிழ் தேசியக் கட்சிகள் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குமாறு தமிழ் தேசியக் கட்சிகள் பகிரங்க அழைப்பு 

by Bella Dalima 09-04-2022 | 8:48 PM
Colombo (News 1st) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி, பாராளுமன்ற ஆட்சி முறையை அமுல்படுத்துவதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஏகோபித்து, உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கட்சிகள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளன. இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியன கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமையைக் கட்டுப்படுத்தி, மக்களின் அன்றாட வாழ்வை சகஜ நிலைக்கு கொண்டு வர நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி, அதற்கு பதிலாக பாராளுமன்ற ஆட்சி முறைக்கு நாடு திரும்ப வேண்டும் என தமிழ் தேசியக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இலங்கை சந்தித்துள்ள பாரிய பொருளாதார பிரச்சினையால் மிக தீவிரமானதோர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள போராட்ட சூழ்நிலையை ஜனாதிபதியும் அரசாங்கமும் சகல அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வோடு உரிய முறையில் கையாள வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிடில், முழு நாடும் சீர்குலைந்து அராஜகம் தலைவிரித்து ஆடக்கூடிய மாபெரும் ஆபத்து உருவாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளன. தனி ஒரு மனிதரின் கையில் நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையே, இந்த நெருக்கடி நிலைக்கு அடிப்படை காரணம் என்பதில் பரந்துபட்டதும் தீவிரமானதுமான கருத்தோட்டம் எழுந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைதிக்குலைவை முடிவுக்கு கொண்டுவரவும் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை வழமைக்கு திருப்பவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கி, அதற்கு பதிலாக பாராளுமன்ற ஆட்சி முறைக்கு நாடு திரும்பிச்செல்வதே தீர்வாகும் எனவும் தமிழ் தேசியக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த தீர்மானத்தை இலங்கையின் தேசிய மட்டத்தில் உடனடியாக மேற்கொள்வதற்கு ஏதுவாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஏகோபித்து உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கட்சிகள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளன.