புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை 

தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை 

by Staff Writer 08-04-2022 | 3:28 PM
Colombo (News 1st) தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கான போக்குவரத்து வசதிகளை கருத்திற்கொண்டு இன்று (08) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்து சபையினால் திட்டமிடப்பட்டுள்ள விசேட பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H. பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார். தலைநகர் கொழும்பிலிருந்து இந்த விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். நாளொன்றில் வழமையாக போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பஸ்களுக்கு மேலதிகமாக, 150 தொடக்கம் 200 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார். அதேபோல, தமிழ் - சிங்கள புதுவருடத்தின் பின்னர் கொழும்பிற்கு வருகை தரும் பயணிகளின் நலன் கருதி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, இந்த காலப்பகுதியில் விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. தூர பிரதேசங்களுக்கான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்களில் மேலதிக பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார். இதனிடையே, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையிலும், பதுளைக்கும் மாலை நேரங்களில் விசேட கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். வார இறுதி நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், கரையோர ரயில் போக்குவரத்தில் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதேவேளை, தேவைக்கு மேலதிகமாக ரயில்கள் தயார் நிலையில் காணப்படுவதால், ஓடும் ரயில்களில் ஏறுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும், தரிப்பிடங்களில் நிறுத்தப்பட்டதன் பின்னர் ரயில்களில் ஏறுமாறும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன அறிவுறுத்தினார். இதனிடையே, தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள பஸ்களுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரான்டா குறிப்பிட்டார். அதற்கமைய, மாகும்புற மற்றும் கொழும்பு - புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையங்களுக்கு அருகில் எரிபொருள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனை தவிர மட்டக்குளிய, மொரட்டுவை, இரத்மலானை, மஹரகம மற்றும் தலங்கம டிப்போக்களுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரான்டா சுட்டிக்காட்டினார்.