சட்டமா அதிபரை பதவி நீக்குவோம்

சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வருவோம்: விஜயதாச ராஜபக்ஸ தெரிவிப்பு 

by Staff Writer 06-04-2022 | 4:39 PM
Colombo (News 1st) சட்டமா அதிபரின் செயற்பாடுகள் காரணமாக, அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை  கொண்டு வர சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ இன்று தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். நாட்டின் சட்டவாட்சி தொடர்பில் தற்போது பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளதாகவும்  சட்டத்தரணிகள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார். காட்டுச் சட்டங்கள் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை சீரழிக்க சட்டத்தரணிகள் எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்ட அவர், மல்வானை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை சட்டமா அதிபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவில்லை எனவும் கூறினார்.
அவ்வாறாயின், பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். சட்ட மா அதிபர் திணைக்களம் அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டது. இதேபோன்று சட்ட மா அதிபர் தொடர்ச்சியாக செயற்பட்டால் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அவரை பதவி நீக்குவோம் என்பதை இங்கு கூற விரும்புகின்றேன்
என விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.