அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு; சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டம் 

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு; சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டம் 

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2022 | 7:16 pm

Colombo (News 1st) மருத்துவமனைகளில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அடுத்த வாரமளவில் நாட்டின் சுகாதார கட்டமைப்பு பாரிய நெருக்கடியினை எதிர்நோக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாட்டில் சுகாதார அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன், நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டும் வகையில் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

தேசிய வைத்தியசாலையின் வைத்திய குடியிருப்பிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி லிப்டன் சுற்றுவட்டம் வரை பயணித்ததுடன், அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிபிலை பேராசிரியர் ஞாபகார்த்த பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் தலைமையிலான சுகாதார ஊழியர்கள் பேரணியாக பிபிலை நகருக்கு வருகை தந்து பின்னர் பிபிலை வைத்தியசாலை வரை பேரணியை முன்னெடுத்தனர்.

இதேவேளை, மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இணை சுகாதார மருத்துவபீட மாணவர் சங்கத்தினர் கொழும்பில் இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகிலிருந்து எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேரணியாக சென்றவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் பிரவேசித்து தங்களின் எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.

இதேவேளை, திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலையினால் மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போதுமானளவு மருத்துகள் இன்மையால், நோயாளிகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களும் அரசாங்கத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையிலிருந்து பேரணியாக சென்று வீதியில் இறங்கி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கம்பளை ஆதார வைத்தியசாலையின் சுகாதார பிரிவு ஊழியர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பளை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இருந்து வைத்தியசாலை பிரதான வீதிக்கு பேரணியாக சென்று மீண்டும் வைத்தியசாலை முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக மாவட்ட வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பாறை – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள்
மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனை சுகாதார பிராந்தியத்தில் கடமையாற்றும் வைத்தியர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை – இறக்காமம் பிரதேச வைத்தியசாலயின் வைத்தியர்களும் ஊழியர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு, விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிருத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட ஆசிய நாடுகளே இறக்குமதி செய்கின்றன.

எனினும், டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதியில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்தது.

நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்போது 40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஔடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் 60 வகையான மருந்துகள் ஒரு வாரம் முதல் ஒரு மாதத்திற்கே போதுமானதாக உள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

நாட்டில் மருந்துப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்திய கடன் வசதியின் கீழ், மருந்துகளை இறக்குமதி செய்வோருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர இலங்கை வங்கியூடாக 7 மில்லியன் டொலர் மற்றும் மக்கள் வங்கியூடாக 7 மில்லியன் டொலர் கடன் கடிதத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலைமையை சமாளிப்பதற்கு மேலும் 20 மில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்