இடைக்கால அரசில் இணைவது தொடர்பில் கட்சிகள் கருத்து

இடைக்கால அரசாங்கத்தில் இணையும் உத்தேசமில்லை: சில தமிழ் கட்சிகள் தெரிவிப்பு

by Staff Writer 05-04-2022 | 7:32 PM
Colombo (News 1st) தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க வருமாறு ஜனாதிபதி நேற்று (04) அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் இராஜினாமா செய்து, அரசாங்கம் கலைக்கப்பட்டால் மாத்திரமே புதிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை ஆராய முடியும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இடைக்கால அரசாங்கத்தில் இணைவதற்கான உத்தேசம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். அரசியலமைப்பை மாற்றுவதாக உறுதிமொழி வழங்கப்பட்டால், இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பரிசீலிக்க முடியும் எனவும் அவர் கூறினார். இடைக்கால அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைவதற்கான உத்தேசம் இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இடைக்கால அரசாங்கம் தொடர்பிலான யோசனை குறித்து நியூஸ்ஃபெஸ்டிற்கு கருத்து வௌியிட்டபோதே பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனை தெரிவித்தார். இதேவேளை, 95% மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள, தோல்வியடைந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது புத்திசாலித்தனமானது அல்லவென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.