மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பம்

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பம் 

by Bella Dalima 02-04-2022 | 5:38 PM
Colombo (News 1st) கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டீசல் தொகை கிடைத்தவுடன், மீண்டும் மின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் ரொஹந்த அபேசேகர தெரிவித்தார். இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்திற்கு 1500 மெட்ரிக் தொன் டீசல் கிடைத்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் கெரவலப்பிட்டி அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் அண்மையில் நிறுத்தப்பட்டன. தற்போது செயலிழந்துள்ள Sojitz மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான டீசல் ரயிலில் கொண்டுவரப்படும் என இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் தெரிவித்தார். டீசல் கிடைத்தவுடன் மின்னுற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்றும் 8 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.