மிரிஹான ஆர்ப்பாட்டம் தொடர்பில் CID விசாரணை

by Staff Writer 01-04-2022 | 3:58 PM
Colombo (News 1st) நுகேகொடை -  மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரின் தலைமையிலான குழுவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விசாரணைக் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கெமராக்களை பயன்படுத்தி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசேட சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நாட்டில் காணப்படும் குற்றவியல் தண்டனை சட்டக்கோவை மற்றும் பொது சொத்துக்கள் தொடர்பான சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். திட்டமிடப்பட்ட வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கான கட்டளைகள் தொடர்பில் , அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது , பல மணித்தியாலங்கள் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டதாகவும், நிலைமை எல்லை மீறியதன் பின்னரே குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த வேண்டி ஏற்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். மாலை 6 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இரவு 10.30 க்கு பின்னரே நிலைமை மோசமடைந்ததாக அவர் குறிப்பிட்டார். நிலைமையை கட்டுப்படுத்த சட்டத்தில் காணப்பட்ட கட்டளைகளை பயன்படுத்த நேரிட்டதாகவும், அதற்கமைய, முதலில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். அதன் பின்னரே நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் வாகனங்களுக்கு தீ மூட்டியதன் பின்னரே இந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார். நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தின் போது, சுமார் 39 மில்லியன் ரூபா சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, 24 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 18 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என , சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.