இலங்கை தமிழர் நலன் காக்குமாறு ஸ்டாலின் கோரிக்கை

இலங்கை தமிழர் நலன் தொடர்பில் பாரத பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை 

by Staff Writer 01-04-2022 | 7:04 PM
Colombo (News 1st) இலங்கை தமிழர்களின் நலன் தொடர்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். டெல்லியில் பாரத பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, 14 அம்ச கோரிக்கைகளையும் தமிழக முதல்வர் முன்வைத்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் தமிழக முதல்வர் கையளித்துள்ளார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக முதலமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, தமிழக முதல்வர் தெரிவித்ததாவது,
இலங்கையிலுள்ள அசாதாரண சூழ்நிலைகளை நீங்கள் அறிவீர்கள். பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களையும் உயிர் காக்கும் பொருட்களையும் வழங்குவதற்கான கோரிக்கையை வைத்துள்ளேன். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும் அரசியல் உரிமையும் கிடைக்க கோரிக்கை வைத்துள்ளேன். தமிழக மீனவர்களின் பாராம்பரிய மீனவ உரிமை தொடர்பில் வலியுறுத்தியுள்ளேன். கச்சத்தீவு மீட்பு குறித்தும் கோரிக்கை வைத்துள்ளேன்.
என குறிப்பிட்டார்.