ஆர்ப்பாட்டங்களால் நாடு பின்னடைவை சந்திக்கும் என்கிறார்  பிரசன்ன ரணதுங்க 

by Staff Writer 01-04-2022 | 3:18 PM
Colombo (News 1st) மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்று (31) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கடும்போக்குவாதிகளின் செயற்பாடு என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார். அதற்கு அராஜகமான முறையில் ஈடுபடுவது முறையான விடயம் இல்லை என அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சம்பவங்களால் நாடு மேலும் பின்னடைவை எதிர்நோக்கக்கூடும் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடு திறக்கப்பட்ட 05 மாதங்களுக்குள் ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகளை வரவழைக்க முடிந்ததாகவும், இதனால் 500 மில்லியன் டொலர் இலாபம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். வௌிநாடுகளுக்கு செல்லும் பணியாளர்கள் நாளாந்தம் அதிகரித்துள்ள நிலையில், இவர்களூடாக எதிர்வரும் மாதங்களில் அந்நிய செலாவணி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். இதனால் எதிர்கட்சியினருக்கு பாரிய சிக்கல் ஏற்படும் எனவும், நெருக்கடி நிலை தீர்ந்துவிட்டால் எதிர்கட்சியினருக்கு அரசியல் நடத்த முடியாது எனவும் பிரசன்ன ரணதுங்க கூறினார். நேற்றைய சம்பவத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகளும் காணப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். மிரிஹானயில் நேற்றிரவு இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இயலுமானவரை அமைதியான முறையில் கலைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாக சுற்றுலாத்துறை அமைச்சர் கூறினார். எனினும், அதிகாலை 1.30 மணியளவில் நிலைமை மோசமடைந்தமையால், குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, 30 நிமிடங்களுக்குள் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். தங்களுக்கு கிடைத்துள்ள காணொளி ஆதாரங்களுக்கு அமைய இது கடும்போக்குவாதிகளின் செயற்பாடு என்பது தெட்டத்தௌிவாக புலனாவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.