by Bella Dalima 01-04-2022 | 5:06 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தாலும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
நேற்று (31) மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே பாகிஸ்தான் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
நெருக்கடி நிலை காரணமாக பதவியில் இருந்து விலகப் போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்ததையடுத்து பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இதற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் மோசமான ஆட்சியே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதனையடுத்து, பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நேற்று மாலை ஆரம்பமானது.
பாகிஸ்தான் பாராளுமன்ற கீழவையில் எதிர்வரும் 03 ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் எனவும் மேலும் தான் அரசியலுக்குள் வந்ததன் நோக்கம் குறித்தும் மக்களுக்கு அவர் தெளிவூட்டியுள்ளார்.
தமது அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் சூழ்ச்சி இடம்பெறுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழ்ச்சிக்கு ஆதரவு வழங்கும் துரோகிகளும் தமது நாட்டுக்குள்ளேயே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.