பிரேரணையை மீள பெற்றால் பாராளுமன்றம் கலைக்கப்படும்

நம்பிக்கையில்லா பிரேரணையை மீள பெற்றால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: இம்ரான் கான் தெரிவிப்பு

by Bella Dalima 31-03-2022 | 7:49 PM
Colombo (News 1st) தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீள பெறப்படுமாயின், பாராளுமன்றத்தை கலைப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்வந்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான தேசிய சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக இன்று நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. தமது அரசைக் கவிழ்ப்பதில் வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று மாலை ஆரம்பமானது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்ற கீழவையில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாகிஸ்தான் தெஹ்ரீக்- இ- இன்சாப் கட்சியின் சிரேஷ்ட தலைவர் Faisal Vawda கூறியுள்ளார். பிரதமர் இம்ரான் கானை கொல்ல திட்டம் தீட்டப்பட்டதாக அவர் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மத்தியில் செல்லும் போது, குண்டு துளைக்காத அங்கியை அணியுமாறு பிரதமருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.