COVID தொற்று காரணமாக பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது: BIMSTEC  மாநாட்டில் ஜனாதிபதி உரை

by Staff Writer 30-03-2022 | 9:10 PM
Colombo (News 1st)  COVID தொற்று காரணமாக நூற்றாண்டின் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (30) நடைபெற்ற BIMSTEC அரச தலைவர்களின் ஐந்தாவது மாநாட்டில் தெரிவித்தார். இந்த மாநாட்டில் உரையாற்றிய பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, COVID தொற்று நிலைமைக்கு மத்தியிலும் தமது நாடு 6.3 வீத பொருளாதார அபிவிருத்தி வேகத்தை அடைந்ததாக சுட்டிக்காட்டினார். பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், தாய்லாந்து, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய 7 நாடுகளின் அரச தலைவர்கள் மெய்நிகர் வழியாக இன்றைய BIMSTEC மாநாட்டில் கலந்துகொண்டனர். BIMSTEC எனப்படுகின்ற பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா நாடுகளின் மாநாட்டின் தலைமையுரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிகழ்த்தினார். இதன்போது அவர் தெரிவித்ததாவது,
COVID தொற்று நிலைமை காரணமாக நூற்றாண்டின் பாரிய நெருக்கியை உலகம் சந்தித்துள்ளது. இதன் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கட்டண அரிகரிப்பு மற்றும் விநியோக வரையறைகள் காரணமாக உலகம் முழுவதும் பண வீக்கத்தை உருவாக்கியுள்ளது. அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையும் அந்த பொருளாதார விளைவுகளை கடினமாக சந்தித்து வருகிறது. எவ்வாறாயினும், மக்களின் மகத்தான் சக்தி, பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை இந்த இக்கட்டான சூழ்நிலையை வெற்றிகொண்டு பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் என நான் நம்புகிறேன். 2030 ஆம்ஆண்டளவில் தேசிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கு மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மூலம் கிடைக்கும் பங்களிப்பை 70 வீதம் வரை அதிகரிக்கவும், 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையை கார்பன் அற்ற நாடாக மாற்றவும் எதிர்பார்க்கின்றேன்
COVID தொற்றுக்கு மத்தியில் பொருளாதாரத்தை மேம்படுத்திய விதம் தொடர்பாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பின்வருமாறு விளக்கமளித்தார்.
 பங்களாதேஷ் உலகில் வேகமாக அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஐந்து நாடுகளுக்குள் இடம்பெற்றுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் கூறுகின்றேன். COVID-19 சவால் இருந்தாலும் நாம் கடந்த வருடத்தில் 6.3 % பொருளாதார வளர்ச்சி வேகத்தை அடைந்தோம். பங்களாதேஷின் அனைத்து மக்களுக்கும் மின்சாரத்தை வழங்கும் திட்டத்தை நாம் கடந்த வாரம் நிறைவு செய்தோம்
மின்சார விநியோக தொடர்புகளை கட்டியெழுப்புவது தொடர்பாக இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பின்வருமாறு கருத்து வௌியிட்டார்.
பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். இந்தியா இதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை BIMSTEC செயலகத்திற்கு வழங்கும். அதேபோன்று, மின்சார விநியோக வலையமைப்புகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு அப்பாற்சென்று அதனை நடைமுறைப்படுத்துவதற்கான காலம் தற்போது வந்துள்ளது.