பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படக்கூடும்

பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படக்கூடும்: நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு 

by Staff Writer 30-03-2022 | 5:02 PM
Colombo (News 1st) மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் காலப்பகுதியில் மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான டீசல் கிடைக்காவிடின், பல பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. பிலியந்தலை, பன்னிப்பிட்டிய, மஹரகம, ஹோக்கந்தர மற்றும் பத்தரமுல்லை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மேற்கு மற்றும் மத்திய வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளர் A.K. கப்புராகே தெரிவித்தார். டீசல் இன்மையால் ஏற்கனவே பல சிரமங்களுக்கு மத்தியில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், தற்போது அத்தியாவசியத் தேவையாக நீர் விநியோகம் அமுல்படுத்தப்பட்டு இருப்பதால், மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கான டீசல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார். இதனிடையே, வறட்சியான காலநிலை காரணமாக நாளாந்த நீர்த் தேவை அதிகரித்துள்ளது. எனினும், மிக சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.