உக்ரைன் தலைநகரில் தாக்குதலை குறைக்க ரஷ்யா இணக்கம்

உக்ரைன் தலைநகரில் தாக்குதலைக் குறைக்க ரஷ்யா இணக்கம்

by Bella Dalima 30-03-2022 | 4:16 PM
Colombo (News 1st) உக்ரைன் தலைநகா் Kyiv-ஐ சுற்றியுள்ள பகுதிகளிலும் வடக்குப் பகுதி நகரான சொ்னிஹீவிலும் தாக்குதல் நடவடிக்கைகளை மிகப் பெரிய அளவில் குறைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை இணையமைச்சா் அலெக்ஸாண்டா் ஃபோமின் தெரிவித்துள்ளார். கீவ் மற்றும் சொ்னிஹீவ் நகரங்களைச் சுற்றி இராணுவ நடவடிக்கைகளை வெகுவாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும் சமாதான பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால், ரஷ்யா வலியுறுத்தும் அணிசாரா நிலைப்பாட்டை ஏற்க சம்மதம் தெரிவிப்பதாக இஸ்தான்புல் பேச்சுவாா்த்தையின்போது உக்ரைன் தெரிவித்துள்ளது. நேட்டோவில் இணையாமலேயே உக்ரைனின் பாதுகாப்பிற்கு மேற்கத்திய நாடுகள் உத்தவாதம் அளித்தால், அணிசாரா நிலைப்பாட்டை ஏற்போம் என உக்ரைனின் பேச்சுவாா்த்தைக் குழு உறுப்பினா் டேவிட் அரகாமியா குறிப்பிட்டுள்ளார். NATO-வின் 5-ஆவது சட்ட விதியின்படி, அந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாட்டின் மீது யாராவது படையெடுத்தால்தான் அது மற்ற உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலுக்கு இணையாகும். அப்போதுதான், NATO அமைப்பு எதிா்வினையாற்றும். அணிசாரா நிலைப்பாட்டை எடுத்தால், NATO-வில் இணையும் விருப்பத்தை உக்ரைன் நிரந்தரமாகக் கைவிட வேண்டியிருக்கும்.