BIMSTEC நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடல்

by Staff Writer 29-03-2022 | 8:40 PM
Colombo (News 1st) BIMSTEC எனப்படும் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா நாடுகளின் மாநாடு கொழும்பில் நாளை (30) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு இணையாக BIMSTEC நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற BIMSTEC வௌிவிவகார அமைச்சர்களின் கலந்துரையாடலுக்கு வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தலைமை தாங்கினார். இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்கள் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். மியன்மார் வௌிவிவகார அமைச்சர் மெய்நிகர் வழியாக இதில் பங்கேற்றார். அடுத்த முறை நடைபெறவுள்ள அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடலுக்கான தலைமைத்துவத்தை கையளித்தல், BIMSTEC பொதுச் செயலாளரின் அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்தல் , நாளை நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கையொப்பமிடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகள் தொடர்பில் தௌிவுபடுத்துதல் என்பன வௌிவிவகார அமைச்சர்களின் இன்றைய சந்திப்பின்போது இடம்பெற்றன.