தமிழ் தேசிய மக்கள் முன்னணி S.ஜெய்சங்கருக்கு கடிதம்

13 ஆவது திருத்தத்தை தீர்விற்கான ஆரம்ப புள்ளியாகக் கூட கருத முடியாது: தமிழ் தேசிய மக்கள் முன்னணி

by Staff Writer 29-03-2022 | 7:13 PM
Colombo (News 1st) 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆரம்ப புள்ளியாகக் கூட கருத முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காமையால், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் ஊடாக குறித்த கடிதத்தை அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 வருடங்களுக்கு மேலாக 13 ஆம் திருத்தமும் மாகாண சபைகளும் இலங்கை அரசியலமைப்பில் இருந்தும் கூட, தமிழ் மக்கள் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் ஒற்றையாட்சியை முற்றுமுழுதாக நிராகரித்தே தமது ஏகோபித்த ஆணையை வழங்கியதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற, சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய, இணைந்த வடக்கு கிழக்கு தாயகம் பாதுகாக்கப்படுகின்ற சமஷ்டி தீர்வையை தொடர்ந்தும் கோரி நிற்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 34 வருடங்களாக மக்களின் ஆணைகளை பெற்றவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில், 13 ஆம் திருத்தம் ஒரு பேசுபொருளாகக் கூட பதிவு செய்யப்படவில்லை என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கிலெடுக்கப்படாத, நிராகரிக்கப்பட்ட விடயமாக தமிழ் தேசிய அரங்கில் 13 ஆம் திருத்தம் காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு ஈழ தமிழ் தேசம் உறுதியாக செயற்பட்டு வரும் நிலையில், மக்களின் நலன்களை பேணும் வகையில், இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து, ஒற்றையாட்சி அரசியலமைப்பை கொண்டு வருவதை தடுத்து, தமிழ் தேசியம் அங்கீகரிக்கும் சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவர, இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.