MTV செனல் தனியார் நிறுவனத்தினால் ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவன தலைவருக்கு 20 கேள்விகள்

by Staff Writer 28-03-2022 | 10:05 PM
Colombo (News 1st) MTV செனல் தனியார் நிறுவனத்திற்கு எதிராக ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில், MTV செனல் தனியார் நிறுவனம் 20 கேள்விகளை ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் (George Steuart Health (Pvt) Ltd) தலைவர் திலித் ஜயவீரவிற்கு அனுப்பி வைத்துள்ளது. MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி முன்வைத்த வேண்டுகோள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, 2020 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள 20 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு ஜோர்ஸ் டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்விகளில், 01. முறைப்பாட்டாளர் நிறுவனத்தினால் Rapid Antigen பரிசோதனை தொகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் அவதூறை ஏற்படுத்தும் வகையிலான செய்தி ஹிரு TV, அருண பத்திரிகை, செய்தி இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டதா எனவும் செய்தி வௌியிடப்பட்டிருந்தால் அந்த நிறுவனம் அது தொடர்பில் ஏதேனும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதா? 02. ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் தலைவர் தலைவர் திலீத் ஜயவீர தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இலக்கம் DMR 216/2012 என்ற வழக்கை தாக்கல் செய்துள்ளாரா? 03. அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவன தலைவர் திலீத் ஜயவீர என்பவர் நற்பெயருடன் கூடிய அல்லது பண்புள்ள ஒருவர் அல்லவென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? 04. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி தில்ஷான் பத்திரண என்பவர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத் தலைவர் திலீத் ஜயவீர மக்கள் மத்தியில், தான் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் அல்லது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக கூறினாரா எனவும் வினவப்பட்டுள்ளது. 05. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி குறித்த நூல் வெளியீட்டு விழாவில் தாம் சிறையில் அடைக்கப்படவிருந்ததால் நிறுவனத் தலைவர் பதவியை பொறுப்பேற்க நேரிட்டதாக அவர் கூறினாரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 06. முறைப்பாட்டாளர் நிறுவனம் ஒரு பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டு நீதவான் நீதிமன்றம் அல்லது மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதா எனவும் அவ்வாறெனில் அந்த வழக்கு இலக்கங்கள் என்னவெனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 07. நாணய கட்டுப்பாட்டு சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டாளர் நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதா? அந்த வழக்குகளில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளாரா? அதற்காக செலுத்தப்பட்ட அபராதம் என்னவெனவும் வினவப்பட்டுள்ளது. 08. Rapid Antigen பரிசோதனை தொகுதிகளை உள்நாட்டில் விநியோகிப்பதற்கு முன்னதாக முறைப்பாட்டாளர் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் தேவையான அனுமதியை பெற்றுள்ளாரா, அவ்வாறெனில் அந்த அனுமதியின் இலக்கம் என்ன? எப்போது அனுமதி வழங்கப்பட்டது? செல்லுபடியாகும் திகதி என்னவெனவும் மற்றுமொரு கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. 09. இதுவரை முறைப்பாட்டாளர் எவ்வளவு Rapid Antigen தொகுதிகளை இறக்குமதி செய்துள்ளார் எனவும் எத்தனை சந்தர்ப்பங்களில் அவை இறக்குமதி செய்யப்பட்டன எனவும் வினவப்பட்டுள்ளது. 10. MTV செனல் தனியார் நிறுவனத்தின் சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை செவிமடுத்த நீதிமன்றம், முறைப்பாட்டாளரின் சட்டத்தரணியான சனத் விஜேவர்தன ஊடாக திலித் ஜயவீரவிடம் கேள்விக்கோவையை கையளிக்குமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி ஜி.ஜி. அருள் பிரகாசத்தின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவாவுடன் சட்டத்தரணிகளான மியுரு இகலஹேவா, என்.கே. அசோக்பரன், தமித்த கருணாரத்ன மற்றும் நிரஞ்சன் அருள்பிரகாசம் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.