by Staff Writer 27-03-2022 | 8:40 PM
Colombo (News 1st) தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை கடற்படையினரை தவிர்த்து துணை இராணுவப் படையினரை ஈடுபடுத்துமாறு இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் சந்தர்ப்பங்களில், பாதிப்புகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் இந்தியா கோரியுள்ளதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற இருதரப்பு இணைந்த கடற்றொழில் செயற்குழுவின் மெய்நிகர் கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க மற்றும் இந்திய கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஜடிந்திர நாத் ஸ்வாயின் உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாகவும் 'த ஹிந்து' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சமுத்திர சட்டத்தின் சில முக்கிய சரத்துகள் மீனவர் நேயமானதென தெரிவித்த இந்தியா, மீனவர் விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாளுமாறும் இலங்கையிடம் தெரிவித்துள்ளது.
மீனவர் விவகாரத்தில் அநாவசியமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதை எக்காரணத்திற்காகவும் நியாயப்படுத்த முடியாதென்பதில் இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் மீன்பிடி முறைமைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் இதன்போது அதிருப்தி வௌிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு கடற்படைக்கு பதிலாக துணை இராணுவ குழுக்களை ஈடுபடுத்துமாறு இந்தியா கோரியுள்ளதா என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ.ரத்நாயக்கவிடம் வினவிய போது, அத்தகைய யோசனை முன்வைக்கப்படவில்லை என தெரிவித்தார்.