சவுதியின் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்

சவுதி அரேபிய எண்ணெய் கிடங்குகளில் யேமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

by Bella Dalima 26-03-2022 | 4:34 PM
Colombo (News 1st) யேமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கிடங்குகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஜெட்டா மற்றும் ரியாத்திலுள்ள சவுதி அரேபியாவிற்கு உரித்தான Saudi Aramco நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. தாக்குதலுக்குள்ளான இரண்டு கிடங்குகளிலும் தீப்பற்றியதுடன், அப்பகுதி முழுவதும் கரும்புகை வௌியேறி வருகின்றது. இந்த தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சு கண்டனம் வௌியிட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் தடைகளுக்கு பொறுப்பேற்க முடியாது என சவுதி அரேபிய எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும், தாக்குதல் குறித்து  Saudi Aramco எண்ணெய் நிறுவனம் இதுவரை எவ்வித கருத்தையும் வௌியிடவில்லை.
ஏமன் நாட்டில் அரச படைகளுக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவளித்து வருகின்றன. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்சும் அங்கம் வகிக்கிறது. இதனால் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.