எரிபொருள் கப்பலுக்கு 42 மில்லியன் டொலர் கட்டணம்

40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் வந்த கப்பலுக்கு 42 மில்லியன் டொலர் கட்டணம் செலுத்தப்பட்டது - எரிசக்தி அமைச்சு

by Bella Dalima 25-03-2022 | 4:10 PM
Colombo (News 1st) கடந்த 14 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பலை இன்று விடுவித்துக்கொள்ள முடிந்ததாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பலுக்கு 42 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் K.D.R. ஒல்கா குறிப்பிட்டார். சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த குறித்த கப்பலில் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் 20,000 மெட்ரிக் தொன் எரிபொருளும் 20,000 மெட்ரிக் தொன் டீசலும் உள்ளதாக அவர் கூறினார். கப்பலிலிருந்து எரிபொருளை தரையிறக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விரைவில் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டது.   இதேவேளை, 3600 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த எரிவாயுவை கூடிய விரைவில் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்தார். அத்துடன், நாட்டில் தற்போது காணப்படும் எரிவாயுவிற்கான வரிசையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு மேலும் ஒருவார காலம் செல்லுமென அவர் கூறினார். இம்மாத இறுதிக்கு முன்னர் ஒரு மில்லியன் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனிடையே 2000 மெட்ரிக் தொன் எரிவாயு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருப்பதாக லாஃப் நிறுவனம் தெரிவித்தது. அதனூடாக நாளொன்றுக்கு 4000 தொடக்கம் 5000 வரையிலான சிலிண்டர்களுக்கான எரிவாயு நிரப்பப்படுவதாக லாஃப் நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகப்பிட்டிய தெரிவித்தார்.