மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு 

by Staff Writer 25-03-2022 | 7:16 PM
Colombo (News 1st) மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் போனோர் உறவினர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக முடியாது என மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் காணாமல் போனோர் உறவினர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராக முடியும் என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடந்த மாதம் 22 ஆம் திகதி கடட்டளையிட்டார். இந்த கட்டளையைத் தொடர்ந்து மன்னார் நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் இம்மானுவேல் டயஸ் பல்டானோ முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் மன்றில் சமூகமளிக்காததால், வழக்கை ஒத்திவைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர். இதற்கமைய, வழக்கை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி V.S. நிரஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோரும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி புராதினியும் மன்றில் முன்னிலையாகினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மன்னார் நகரில் சதொச கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டிட வேலை இடைநிறுத்தப்பட்டு மனித எச்சங்களுக்கான அகழ்வுப்பணிகள் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்லையில் இடம்பெற்று வந்தன.