நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான இரண்டாவது வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட ரஞ்சன் ராமநாயக்க 

by Bella Dalima 25-03-2022 | 5:13 PM
Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான இரண்டாவது வழக்கிலும் தாம் குற்றவாளி என ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். தமது கருத்தினூடாக அவமதிப்போ, நிந்தனையோ அல்லது இகழ்ச்சியோ இடம்பெற்றதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்தால், அது தொடர்பில் தாம் நிபந்தனையின்றி வருத்தம் தெரிவிப்பதாக, குற்றத்தை ஒப்புக்கொண்ட ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் தெரிவித்த கருத்தினூடாக உயர் நீதிமன்றத்தை இகழ்வதற்கு தாம் எவ்விதத்தில் எண்ணவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் குற்றவாளி அல்லவென இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தை மீள பெற்றுக்கொண்டு இன்று இந்த ஒப்புதலை வழங்கினார். நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான இரண்டாவது வழக்கு, புவனேக அளுவிகாரே, L.T.B. தெஹிதெனிய மற்றும் காமினி அமரசேகர உள்ளிட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தர்ப்பமொன்றில் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்றுக்கு உள்ளதென, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் தெரிவித்துள்ளார். முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து பொருத்தமான உத்தரவை வழங்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனுர வெத்தகொட விடயங்களை முன்வைத்தார். இது தொடர்பிலான எழுத்துமூல ஆவணத்தை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்ற நீதியர்சர் குழாம் அறிவித்துள்ளது. அத்துடன், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.