இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியா செல்பவர்கள் தொடர்பில் கடற்படை கண்காணிப்பு

by Staff Writer 25-03-2022 | 8:04 PM
Colombo (News 1st) இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு படகு மூலம் பயணித்து, மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை ஆணையாளர் ஜெசிந்தா லாசரஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் . தமிழகத்தின் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு விஜயம் செய்த ஆணையாளர், இலங்கைத் தமிழர்களின் நலன்கள் தொடர்பில் நேற்று (24) கேட்டறிந்து கொண்டார். இதனிடையே, இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயற்சிப்பவர்கள் தொடர்பில் கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். கடல் மார்க்கமாக தப்பிச்செல்லும் பகுதிகள் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாகவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய மத்திய வௌியுறவுத்துறை அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உதவுவதற்கு ஏதேனும் திட்டங்களை இந்தியா வைத்துள்ளதா என மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுத்து மூலம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் அறிக்கையொன்றின் ஊடாக பதிலளித்துள்ளார். COVID பெருந்தொற்று காலத்தில் பாரிய பொருளாதார சரிவை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு பல்வேறு வழிகளில் இந்தியா ஆதரவளித்து வருவதாகவும் ஜனவரி மாதம் இந்திய அரசு இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதி, அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மருந்து கொள்வனவிற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய அரசு கடனாக வழங்கியுள்ளமையையும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.