ரயில் கட்டணம் அதிகரிப்பு

வடக்கு மற்றும் பிரதான மார்க்கங்களில் ரயில் கட்டணம் அதிகரிப்பு

by Staff Writer 24-03-2022 | 4:03 PM
Colombo (News 1st) வடக்கு மற்றும் பிரதான மார்க்கங்களில் பயணிக்கும் ரயில்களின் கட்டணம் இன்று (24) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மார்க்கத்தில் கொழும்பு கோட்டை தொடக்கம் குருநாகல் வரை முதலாம் வகுப்பிற்கான 600 ரூபா கட்டணம் 1000 ரூபா வரையும், கோட்டையிலிருந்து அநுராதபுரம் வரையான முதலாம் வகுப்பு கட்டணம் 1200 ரூபாவிலிருந்து 1500 ரூபா வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை முதல் வகுப்பிற்கான கட்டணம் 1400 ரூபாவிலிருந்து 1700 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் V.S. பொல்வத்தகே குறிப்பிட்டார். இதனை தவிர, இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு ஆசனங்களுக்கான முன்பதிவு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரதான ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையான முதலாம் வகுப்பு கட்டணம் 1000 ரூபாவிலிருந்து 1200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நானுஓயாவிற்கு 1200 ரூபாவிலிருந்து 2000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் கூறினார். கோட்டையிலிருந்து எல்ல மற்றும் பதுளை வரையான போக்குவரத்திற்கு முதலாம் வகுப்பிற்கான கட்டணம் 1500 ரூபாவிலிருந்து 2500 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக இந்த பகுதிகளுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கான ரயில் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார். போக்குவரத்து கட்டண திருத்தத்திற்கு அமைய, கொழும்பிலிருந்து கண்டி வரையான நகர்சேர் கடுகதி ரயிலுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சாதாரண பயணக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் கட்டண திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் V.S. பொல்வத்தகே சுட்டிக்காட்டினார்.