கட்டுகஸ்தோட்டையில் தீக்கிரையான வீட்டிற்கு தீ மூட்டப்பட்டதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பெண் வாக்குமூலம்

by Staff Writer 24-03-2022 | 4:27 PM
Colombo (News 1st) கண்டி - கட்டுகஸ்தோட்டை, மெனிக்கும்புர பகுதியில் வீடு தீக்கிரையாகி மூவர் உயிரிழந்தனர். குறித்த வீட்டிற்கு தீ மூட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதனை கொலையாகக் கருதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். வௌிநபர் ஒருவர் வீட்டிற்குள் தீக்கிரையாகி உயிரிழந்தமை , மேலும் சில சந்தேகத்திற்கிடமான தடயங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 71 வயதான தந்தை, 30 வயதான மகள், மகளின் காதலன் ஆகியோரே தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர். வீட்டிலிருந்த 66 வயதான தாய் தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 30 வயதான தனது மகளின் காதலனால் வீட்டிற்கு தீ மூட்டப்பட்டதாக, தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் கூறினர்.