ராமர் பாலம் தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

இராமர் பாலம் தொடர்பான சுப்ரமணியன் சுவாமியின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

by Staff Writer 24-03-2022 | 7:09 PM
Colombo (News 1st) இந்தியர்களால் 'ராம் சேது' என அழைக்கப்படுகின்ற இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய பாரம்பரிய சின்னமாக பிரகடனப்படுத்துமாறு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனுவை சில வாரங்கள் கழித்து விசாரணை செய்யவுள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதியரசர்கள் அமர்வை ஏற்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளதாக இந்த வழக்கில் ஆஜரான சுப்ரமணியன் சுவாமியிடம், உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் N.V. ரமணா தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதனால் இந்த வழக்கு சில வாரங்கள் கழித்து விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் அதுவரை பொறுத்திருக்குமாறும் தலைமை நீதியரசர் சுப்ரமணியன் சுவாமியிடம் தெரிவித்துள்ளார். இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கு மார்ச் மாதம் 9 ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருந்த நிலையில், பின்னர் அது 22 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டிருந்தது. தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கு இடையே உள்ள ஆழமற்ற 16 மணல் திட்டுக்களை கொண்ட பகுதியே இராமர் பாலம் என அழைக்கப்படுகிறது. இராமர் பாலத்தின் எட்டு மணல் திட்டுக்கள் இலங்கைக்கு உரித்தானவை. அவை இலங்கையின் கடற்பரப்பில் அமைந்துள்ளன. இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய பாரம்பரிய சின்னமாக பிரகடனப்படுத்தும் முயற்சி தொடர்பில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மௌனத்தை கடைப்பிடித்து வரும் நிலையில், எமது நாட்டிற்கு சொந்தமான மணல் திட்டுக்களும் இந்தியாவின் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் அபாயம் வலுவடைகின்றதல்லவா?