ராஜபக்ஸக்கள் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும்: அனுரகுமார வலியுறுத்தல்

by Bella Dalima 23-03-2022 | 8:10 PM
Colombo (News 1st) தற்போதைய அரசாங்கத்தை மக்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தி நுகேகொடையில் இன்று (23) நடத்திய எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆரப்பாட்டப் பேரணி இன்று முற்பகல் தெல்கந்த பகுதியில் ஆரம்பமானது. 74 வருட கால சாபத்திற்கு முடிவு கட்டுவோம், அடக்குமுறை அரசாங்கத்தை துரத்துவோம் எனும் தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணி , ஹைலெவல் வீதியூடாக நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவௌி கலையரங்கை சென்றடைந்து. இதன்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் திருடர்கள் என குறிப்பிட்டார். ஜனாதிபதிக்குள்ள விடுபாட்டுரிமை காரணமாக வழக்குகளில் இருந்து தப்பிய ஜனாதிபதி தலைமையிலேயே கூட்டம் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டை கடன் பொறிக்குள் சிக்கவைத்து, நாட்டு மக்களின் சொத்தை கோடிக்கணக்கில் திருடி, குடும்பத்தை வலுவாக்கிக் கொண்ட ராஜபக்ஸவினர் நாட்டை விட்டுச்செல்ல வேண்டும் என அனுரகுமார வலியுறுத்தினார். நாட்டின் பாதுகாப்பு சார்ந்த உடன்படிக்கைகளுடன் தொடர்புடைய 7 அமைச்சரவை பத்திரங்கள் தம்மிடம் உள்ளதாகக் குறிப்பிட்ட அனுரகுமார, அவற்றில் சில அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே கையொப்பமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சரின் இந்திய பயணத்திற்கு முன்னதாக, கண்காணிப்பு ட்ரோன்கள் தொடர்பிலான பரிமாற்ற ஆவணங்களில் கைச்சாத்திட வேண்டியிருந்ததால், இந்திய அரசாங்கம் சார்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் 2022 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி பத்திரம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.15 ஆம் திகதி கையொப்பமிட்டதன் பின்னர் 18 ஆம் திகதி அமைச்சரவையில் அதனை சமர்ப்பிக்கின்றனர். கைச்சாத்திடப்பட்டதற்கு அனுமதி கோருகின்றனர். உங்களது அபிலாஷைகள் என்ன? உங்களது எதிர்பார்ப்பு என்ன? ஏன் வந்தீர்கள்? இந்த நாசக்கார ஆட்சியை மாற்றவும் புதிய மக்கள் நேய ஆட்சியை உருவாக்கவுமே வந்துள்ளீர்கள்!
என அனுரகுமார திசாநாயக்க கூறினார்.