Colombo (News 1st) பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வகட்சி மாநாடு, கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது.
கஞ்சா ஏற்றுமதி மூலம் அதிகளவிலான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியும் என மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் 15 கட்சிகளில் 7 கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லையென நேற்று அறிவித்திருந்தன.
11 பங்காளிக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, அத்துரலியே ரத்தன தேரர், திஸ்ஸ வித்தாரண உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்திருந்த போதிலும், அந்த கட்சியின் நசீர் அஹமட் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தபோதிலும், அந்த கட்சியை சேர்ந்த சட்டத்தரணி முஷாரப் முதுநபீன் இதில் பங்கேற்றிருந்தார்.
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அலி ஷப்ரி ரஹீமும் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
இக்கலந்துரையாடலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க,
கட்சி அரசியலில் யார் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பது தொடர்பில் பேச நாம் இங்கு வரவில்லை. மத்திய வங்கியின் ஆளுநர் கூறியதை போன்று குறுகிய அரசியல் இலாபத்திற்காக நாம் இங்கு வரவில்லை. அவர் ஆரம்பிக்கும் போதே இது கடந்த அரசாங்கத்தின் செயற்பாடு என்று கூறினார். அது தொடர்பில் நான் கவலையடைகிறேன். அதற்கு நான் பதில் வழங்கினால் என்ன நடக்கும்? அதற்கு ஒவ்வொருவரும் பதில் வழங்கினால் இங்கு என்ன நடக்கும்? இறுதியில் விஜயன் இலங்கைக்கு வராவிட்டால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று கூறுவர். எதற்காக நாம் அவ்விடத்திற்கு செல்ல வேண்டும்? நாம் அன்று வேறு கொள்கையில் செயற்பட்டோம். அன்று எமது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு உண்பதற்கு, குடிப்பதற்கு பிரச்சினை இருக்கவில்லை. அது தொடர்பில் நான் இங்கு கூற விரும்பவில்லை
என குறிப்பிட்டார்.
இதன்போது, ஜனாதிபதி குறுக்கிட்டு, மனம் நோக பேசியிருந்தால் மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார். எவர் மீதும் தாம் குற்றம் சுமத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஒரு வரையறைக்குள் செயற்படாவிட்டால், எந்த முதலீட்டாளர்களும் வரமாட்டார்கள் என குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, நாடு தொடர்பில் குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டம் இருக்க வேண்டும் என்பதுடன், அரசாங்கத்தின் வௌிப்படைத் தன்மை, அர்ப்பணிப்புகளை இதுவரை காண கிடைக்கவில்லை என கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது. அதனை சமர்பிப்பதாக பல தடவைகள் உறுதி வழங்கப்பட்ட போதும், அது நடக்கவில்லை என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், முழுமையான அறிக்கை தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என பசில் ராஜபக்ஸ பதில் வழங்கினார்.
நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வாக, நிதியுதவிகளை பெறுதல், புதிய பொருளாதார திட்டத்திற்கு உதவி புரியும் கலப்பு நாடுகளை அணுகல், அத்தகைய நாடுகளில் இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் உள்ளடக்கப்பட்டிருத்தல், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றல் ஆகியவற்றை ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்தார்.