ராஜன் கதிர்காமர் கிண்ணம் யாழ்ப்பாண கல்லூரி வசம்

ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணம்  வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வசம்

by Staff Writer 19-03-2022 | 6:17 AM
Colombo (News 1st) 29 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி  சுவீகரித்தது. ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டி நேற்று (18) புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 45.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி 163 ஓட்டங்களைப் பெற்றது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி சார்பில் ஏ.நிகரிலன் 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், பந்து வீச்சில் புனித பத்திரிசியார் கல்லூரி சார்பில் எஸ்.கீர்த்தனன் 4 விக்கெட்களையும் சமிந்தன் மற்றும் சவுத்தியன் தலா 02 விக்கெட்களையும் கைப்பற்றினர். 164 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி 44.1 ஓவரில் சகல விக்கெட்களையும் இழந்து, 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. புனித பத்திசிரியார் கல்லூரி சார்பில் எஸ்.சமிந்தன் 28 ஓட்டங்களையும் ஜே.திவிகரன் 22 ஓட்டங்களையும் பெற்றதுடன், பந்துவீச்சில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி சார்பில் பி.பிருந்தன் மற்றும் மதுசன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். இதன் மூலம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அணி 48 ஓட்டங்களால் புனித பத்திரிசியார் அணியை வீழ்த்தி 29 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது. இதுவரை நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் 21 தடவைகள் புனித பத்திரிசியார் கல்லூரியும் 6 தடவைகள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. சிறந்த பந்து வீச்சாளராக பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த S.கீர்த்தனனும் சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாண கல்லூரியை சேர்ந்த A.கெளசிகனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக A.நிகரிலதனும் தெரிவு செய்யப்பட்டனர். 14 வருடங்களின் பின்னர் தமது கல்லூரி அணி வெற்றியை பதிவு செய்ததாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அணித்தலைவர் N.விஸ்ணுகாந்த் தெரிவித்தார்.