IMF சலுகை மூலம் பிரச்சினையை தீர்க்க முடியுமா?

by Staff Writer 18-03-2022 | 8:30 PM
Colombo (News 1st) மருந்து , உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்தியா ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி வழங்கியுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்திப்பதற்கான முறையான பொறிமுறை தொடர்பில் கலந்துரையாட தயார் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இதனிடையே ஏப்ரல் மாதம் நிதி அமைச்சரின் வாஷிங்டன் விஜயம் உள்ளிட்ட முன்னோக்கி செல்ல முடியுமான அனைத்து வழிகள் தொடர்பிலும் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட தயார் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் Gerry Rice-ஐ மேற்கோள் காட்டி Economy Next இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. அண்மையில் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்ட IMF-இன் ஆசிய பசுபிக் வலய பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர். பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலை ஆரம்பித்ததாகக் கூறினார். வௌிநாட்டு கையிருப்பு குறைவடைந்து, பொருட்களின் விலை வான் அளவு அதிகரித்து, சமையல் எரிவாயு எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி உக்கிரமடைந்துள்ள சூழ்நிலையில், IMF-இன் சலுகையை பெற்றுக்கொள்வது தீர்வாக அமையுமா? கஷ்டமான சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதன் மூலம் அவர்கள் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைக்கும் அடிபணிந்து கடன் பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்படும். COVID வைரஸை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள சந்தர்ப்பத்தில், புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியதைப் போன்று IMF சலுகையைப் பெற்றுக்கொண்டிருந்தால் நிலைமை இந்தளவு மோசமாக அமைந்திருக்காதல்லவா? அந்த சந்தர்ப்பத்தில் சலுகையைப் பெற்றுக்கொண்டு கையிருப்பை பலப்படுத்தியிருந்தால், நாட்டு மக்கள் இந்தளவு தூரம் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதுடன், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும் என்பதே புத்திஜீவிகள் கருத்தாகும். பிரச்சினைக்கு மேல் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் IMF சலுகையை பெற்றுக்கொள்வதற்கான காரணம் என்ன? IMF சலுகை மூலம் மாத்திரம் பிரச்சினையை நிவர்த்திக்க முடியுமா? இல்லாவிட்டால், எதிர்வரும் ஜூன் மாதம் செலுத்த வேண்டியுள்ள ஒரு பில்லியன் பெறுமதியான இறையாண்மை முறிக்கான கொடுப்பனவை வழங்குவதற்காக பின்புலத்தை ஏற்படுத்தும் விடயம் இடம்பெறுகிறதா? கொடுப்பனவை பிற்போடுமாறு, புத்திஜீவிகள் தொடர்ந்தும் வலியுறுத்திய போதிலும் கடந்த ஜனவரி மாதம் 500 மில்லியன் டொலர் இறையாண்மை முறிகளுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டது. இவற்றை இரண்டாம் நிலை சந்தையில் கொள்வனவு செய்தவர்களுக்கு வழங்குவதன் மூலம், அதீத இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அதன்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. நெருக்கடியின் அடுத்த கட்டமாக, ஜூன் மாதம் ஒரு பில்லியனையும் அவ்வாறு செலுத்துவது உசிதமானதா?