மீனவர்களை பெரிதும் பாதித்துள்ள மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு

மீனவர்களை பெரிதும் பாதித்துள்ள மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2022 | 7:41 pm

Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 70 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் விலை தற்போது 87 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினரில் மீனவர்களும் அடங்குகின்றனர்.

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி முதல் இன்று வரை 22 தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் இரண்டு தடவைகளில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, தற்போது 87 ரூபாவிற்கு விநியோகிக்கப்படுகின்றது.

எனினும், நாட்டில் தற்போது நிலவுகின்ற மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டினால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, யாழ். மாவட்டத்திலுள்ள அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய்க்காக மீனவர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.

இதனிடையே, எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்தும் மீன்பிடிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமாறு கோரியும் மீனவர்கள் மாத்தறையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இலங்கை பொது மீனவர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை எற்பாடு செய்திருந்தது.

தெவிநுவர மீன்பிடி துறைமுகத்திலிருந்து பேரணியாக சென்ற மீனவர்கள், கதிர்காமம் – கொழும்பு பிரதான வீதியை தெவிநுவர விஷ்ணு கோவில் அருகில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தினால், கொழும்பு கதிர்காமம் பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் அரை மணித்தியாலம் தடைப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியளார் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்