இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவி

by Staff Writer 17-03-2022 | 8:31 PM
Colombo (News 1st) இந்தியா வழங்கவுள்ள ஒரு பில்லியன் டொலர் குறுகிய கால சலுகைக் கடனுக்கான உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் இன்று (17) பகல் கைச்சாத்திட்டன. புது டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்நிலையில் "அயலவருக்கு முன்னுரிமை, இந்தியா இலங்கையுடன் இருக்கும்" என இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்புகள் தொடர்பில் இங்கு நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்கு குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால பொருளாதார ஒத்துழைப்பு கட்டமைப்பொன்றை உருவாக்க இதன்போது இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று முற்பகல் இந்தியாவின் மீள்புதுப்பிக்கத்த சக்தி அமைச்சர் ராஜ்குமார் சிங்கை புது டெல்லியில் சந்தித்தார். எரிசக்தித்துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட சிலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கடந்த நான்கு மாத காலப்பகுதிக்குள் இந்தியாவிற்கு இரண்டாவது தடவையாகவும் விஜயம் மேற்கொண்டுள்ளார். இறுதியாக அவர் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்திற்கும் இம்முறை பயணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. கிழக்கு இலங்கையின் திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான மூன்று உடன்படிக்கைகள் இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கிடையே கடந்த ஜனவரி மாதம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டன. இம்மாதம் 11 ஆம் திகதி திருகோணமலை - சம்பூரில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தமொன்றில் இந்தியாவின் NTPC நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் கையொப்பமிட்டன. வட மாகாணத்தில் அதானி குழுமத்தின் 500 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான உடன்படிக்கையும் அதே நாளில் கையொப்பமிடப்பட்டது. வடக்கிலுள்ள நெடுந்தீவு, நயினா தீவு மற்றும் அனலை தீவு ஆகிய மூன்று தீவுகளில் சீனா முன்னெடுக்கவிருந்த மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கைவிடப்பட்ட நிலையிலேயே அதானி குழுமத்தின் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த காலப் பகுதியில் 1.4 பில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதனிடையே, யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி திட்டங்களையும் இந்தியா பொறுப்பேற்றுள்ளது. தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் இடையே படகு சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் இரு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன. பௌத்த மற்றம் இராமாயண தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு இரு தரப்பு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி , நிதி அமைச்சருடனான சந்திப்பின்போது கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.