பழைய காயத்தை மீண்டும் கிளறுவது நல்லிணக்கம் ஆகாது: G.L.பீரிஸ் தெரிவிப்பு

by Bella Dalima 16-03-2022 | 4:43 PM
Colombo (News 1st) பழைய காயத்தை மீண்டும் கிளறுவது நல்லிணக்கம் ஆகாதென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமை பேரவையின் இம்முறை அமர்வு தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை கூறினார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டின் இலங்கை தொடர்பான அறிக்கையில் 85 வீதமானவை இலங்கையின் உள்ளக விடயங்கள் சார்ந்தவை எனவும் அது சர்வதேசத்துடன் தொடர்புபட்டவை அல்லவெனவும் இதன்போது G.L.பீரிஸ் குறிப்பிட்டார். இலங்கையின் அரசியல் அமைப்பினை எவ்வாறு மாற்றியமைப்பது, மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்கும் இடையிலான அதிகாரங்கள், பொறுப்புகளை எவ்வாறு பகிர்ந்தளிப்பது, அமைச்சுகளுக்கான செயலாளர்கள், அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட பல விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக G.L.பீரிஸ் கூறினார். மேற்சொன்ன விடயங்கள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்புபட்டவையா என அவர் கேள்வி எழுப்பினார். அதற்கான அதிகாரம் அரசியல் அமைப்பின் பிரகாரம், இலங்கை பாராளுமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே, அதில் தலையிடுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு உரிமை இல்லை என குறிப்பிட்டார். இலங்கை தொடர்பிலான மனித உரிமை விடயங்களுக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் மில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுவதாகவும் அதனால் கடுகளவும் பலனில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேசம் பிளவுபட்டுள்ளது. இலங்கைக்கு சார்பானவர்கள், எதிரானவர்கள் என நாடுகள் பிளவுபட வேண்டி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை மக்கள் மத்தியிலும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பழைய காயத்தை மீண்டும் கிளறுவது நல்லிணக்கம் அல்ல. இந்த செயற்பாட்டினால் நாட்டில் குரோத மனப்பாங்கு அதிகரிக்கின்றது
என வௌிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.